படித்ததில் பிடித்தது
எட்வின் பிரிட்டோவின் "கவிதை துளிகள்"
தமிழ் மொழி சம்பந்தமான தகவல்களை இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது "கவிதை துளிகள்" என்ற இந்த தளத்தை பார்க்க முடிந்தது. மிக எளிய தமிழில் தன் மன உணர்வுகளை எட்வின் பிரிட்டோ என்ற நண்பர் பகிர்ந்துள்ளது இந்த கவிதை தொகுப்பின் சிறப்பு அம்சம். "நீ வேண்டும் எனக்கு...." என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை உங்கள் பார்வைக்காக கீழே வைத்துள்ளேன். http://www.employees.org/~silva/ என்ற இந்த தளத்தின் மூலம் இவர் எழுதிய மேலும் பல கவிதைகளை உங்களால் படிக்க இயலும்.
அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!
வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.
துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.
பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!
எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!
கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு!
- எட்வின் பிரிட்டோ
No comments:
Post a Comment